சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா என்ற பெண் பயணி கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கே பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். பெண் பயணி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த ஆசாமி பாதிச் சங்கிலியை மட்டும் அறுத்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்துத் தப்பியோடினார்.
இதுகுறித்துத் தாம்பரம் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தீவிர விசாரணை மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போதுதான், அந்தப் பகுதியில் சிக்னல் கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்பதும், கொள்ளையன் ரயிலை நிறுத்த ஒரு விசித்திரமான ஐடியாவைக் கையாண்டதும் தெரியவந்தது.
அதாவது, தண்டவாளத்தின் இருபுறமும் இருந்த பச்சை நிற சிக்னல் மின்விளக்குகளைத் தனது சட்டைத் துணியால் மறைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளையடிப்பதை அவன் வழக்கமாக வைத்திருந்திருக்கிறான். இதையடுத்து, சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட நகையையும் மீட்டனர்.
விசாரணையில், இவர் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு நேரத்தில் ரயில்களைக் குறிவைத்து இப்படி சிக்னலில் துணி வச்சு கொள்ளையடிப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்று வந்த இவர் மீது சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
