சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இது குறித்து உயரதிகாரிகளுக்கு வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. அருண் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் விமலா லஞ்சம் கேட்டு மிரட்டியது உண்மை என உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி. அருண் அதிரடி உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் விமலாவுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாய் தயாள், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
“வேலியே பயிரை மேய்ந்தது” போல லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியே லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்தச் சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
