மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனியைச் சேர்ந்த பாலாஜி (30) என்ற வாலிபர், கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பாலாஜிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று மதியம் பாலாஜியும், அவரது நண்பரான ஆறுமுக நகரைச் சேர்ந்த ராஜா உசேனும் (33) மாநகராட்சி குடிநீர் தொட்டி அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில் ராஜா உசேன் பலத்த காயமடைந்து கீழே விழுந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடிய பாலாஜியை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று, சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார், உயிருக்கு போராடிய ராஜா உசேனை மீட்டு சிகிச்சைக்காகவும், பாலாஜியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகவும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது பாலாஜி தரப்பினருக்கும், வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் முன்விரோதமே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
