கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தர்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த காட்டுக்குள், தன்னிச்சையாக அலைந்து திரிந்த 8 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். மனிதர்களைக் கண்டு பயந்ததோடு, சாதாரணமாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த அந்தச் சிறுமி, இந்தியா முழுவதும் “மௌக்லி பெண்” (Mowgli Girl) என்று பிரபலமாக அறியப்பட்டார். மீட்புக்குப் பிறகு பஹ்ரைச் குழந்தைகள் நலக் குழுவால் முதலில் ‘பூஜா’ என்று அழைக்கப்பட்ட அவருக்கு, மாவட்ட மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் ‘நிர்வாணா அரசு சிறப்பு குழந்தைகள் இல்ல’ ஊழியர்களால் ‘எஹ்சாஸ்’ (Ehsaas) எனப் பெயரிடப்பட்டது.

காட்டில் விலங்குகளைப் போலவே நான்கு கால்களால் நடந்தது, ஆடைகளை அணிய மறுத்தது, பேசத் தெரியாமல் விசித்திர சத்தங்களை எழுப்பியது என எஹ்சாஸின் ஆரம்பகால நடவடிக்கைகள் மருத்துவர்களையும் மீட்புக் குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்களான மாயா மற்றும் ரேணுவின் தீவிரப் பராமரிப்பில், எஹ்சாஸ் மெதுவாக மனித வாழ்க்கைக்கு மாறத் தொடங்கினார். பொது இடங்களில் போர்வையால் உடலை மறைப்பது, ஆடைகளை அணிவது மற்றும் பிறர் உதவியுடன் நேராக நிமிர்த்து நிற்கவும் கற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் யாரிடமும் பேசாமலும், மனிதர்களின் பார்வையைத் தவிர்த்துமே வந்தார். இந்த இல்லத்தில் காப்பாளர் ராணி என்பவரை எஹ்சாஸ் அன்போடு “அம்மா” என்று அழைத்து வந்தார்.

மேலும் ராணி அவரைத் தனது சொந்த மகள் போல் வளர்த்து, பல வருடங்களாக அவரது நம்பிக்கையைப் பெற்றார். ஆனால், எஹ்சாஸ் குணமடைந்து விடுவார் என்று ராணி எதிர்பார்த்திருந்த நிலையில், அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கிட்டத்தட்ட 9 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது 18 வயதில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.