யோகா குரு பாபா ராம்தேவ் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுடன் இணைந்துவிடும் என்று எதிர்பாராத ஒரு பெரிய கருத்தை  முன்வைத்துள்ளார். மேலும், பொதுமக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கூற்றுக்குக் கடுமையான எதிர்வினையாற்றினார். இந்தியாவில் இந்து மதம், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் ஆகிய எந்த மதமும் ஒருபோதும் ஆபத்தில் இல்லை என்றும், மாறாக நாட்டின் கவுரவமும் மாண்பும்தான் உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு  பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்கள் கடுமையான ‘கொடுமைகள் மற்றும் அநீதிகளுக்கு’ ஆளாக்கப்பட்டுள்ளதாக ராம்தேவ் குற்றம் சாட்டினார். “பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் சந்தித்துள்ள கொடுமைகளும் அநீதிகளும் மனித நாகரிக வரலாற்றில் மிகக் கொடூரமானவையாகும்” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

சர்தாரியின் கருத்துகள் குறித்துப் பேசிய அவர், “இத்தகைய நிலைமைகளுக்குப் பொறுப்பானவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்; ஒரு நாள் பக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் மீண்டும் இந்தியாவுடன் ஒன்றிணையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், சனாதன தர்மத்தில் எந்தக் குறையும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். “சனாதன கலாச்சாரம் மிகவும் தொன்மையானது. இதில் என்ன குறை கண்டோம், எதற்காக நாம் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும்? வாள்முனையில், ஆசை காட்டி அல்லது தவறான புரிதல்களை ஏற்படுத்திச் சில முஸ்லிம்கள் நமது சனாதன இந்து சகோதரர்களை மதம் மாற்றினர்” என்றார்.

மேலும், சனாதன தர்மத்தில் நிலவும் சமூக வேறுபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், ஒரு சிலரின் குறுகிய மனப்பான்மையே இதற்குக் காரணம் என்றார். ஸ்ரீராமரின் ஒழுக்கம், யோகா, பகவான் கிருஷ்ணரின் கர்ம யோகம் மற்றும் சிவபெருமானின் தூய்மையைப் பின்பற்றுவதாகும். இந்த உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் மதமாற்றத்திற்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சமீபத்தில் அந்நாட்டின் சுதந்திர தின விழாவின் போது பேசுகையில், “இந்தியர்களின் சிந்தனை முறை வேறு. அவர்களின் மனதில் வேறு அஜெண்டா உள்ளது. அவர்கள் ‘அகண்ட பாரதத்தை’ நம்புகிறார்கள். ஆனால், அதற்கு நடுவில் அவர்கள் மறந்துவிட்ட பல விஷயங்கள் உள்ளன” என்று கூறியிருந்தார். மேலும், “நாம் முஸ்லிம்கள், அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால், வெறும் 3 முதல் 4 சதவீத இந்து சமுதாய மக்கள் தொகையை மட்டுமே சகித்துக்கொள்ளும் ஒரு மனநிலையைச் சேர்ந்தவர்கள் நாம்” என்றும் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் மக்கள் தொகை குறித்து அதிபர் சர்தாரி தெரிவித்த கருத்துகள் முற்றிலும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கிஸ்தானின் 2023-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அங்கு தற்போது வெறும் 52 லட்சம் இந்துக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 2.17% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.