குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமான மூன்று மாதங்களிலேயே தனது கணவர் தன்னை ‘மனைவி பரிமாற்றம்’  செய்ய வற்புறுத்தியதாகக் கூறி பரபரப்புப் புகாரை எழுப்பியுள்ளார். இதனால் தங்களின் நிதி நிலைமை மேம்படும், மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் என்று அவரது கணவர் கூறியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திரமான கோரிக்கைக்கு உடன்பட மறுத்ததால், தனக்கு நேர்ந்த உடல் ரீதியான சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் தற்போது அதிகாரிகளை நாடியுள்ளார். இது தொடர்பான அவரது உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இத்தகைய நெட்வொர்க்குகள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போலிப் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி, தம்பதியராகப் புகைப்படங்களைப் பதிவேற்றி இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதில் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பல தம்பதிகள் மாதத்திற்குப் பலமுறை ரகசியமாகச் சந்தித்துக் கொள்வதாகவும், மறுக்கும் மனைவிகள் தங்களைப் போல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னிடம் இதற்கான ஆதாரங்கள் மற்றும் அரட்டை (Chat) பதிவுகள் இருப்பதாகக் கூறியுள்ள அந்தப் பெண், இந்த விவகாரத்தில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்திலும் காவல்துறையிலும் விசாரணையில் உள்ளது.