இங்கிலாந்தில் ஆன்லைன் மூலம் பாலியல் சேவை வழங்குவதாக விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை நைசாகக் கொள்ளையடித்து வந்த ரோமானியத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தீய செயலால் இரு வாடிக்கையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அத்தம்பதிக்கு நீதிமன்றம் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ரோமேனியா நாட்டைச் சேர்ந்த அதினா மிஹாய் (31) என்பவரும், அவரது காதலர் மேடலின் துமித்ரு (30) என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். தீவிர பணத் தேவையின் காரணமாக, அதினா ஆன்லைன் வழியே தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று விளம்பரம் செய்துள்ளார்.

இதனை நம்பித் தொடர்புகொள்ளும் 35 வயது முதல் 80 வயது வரையிலான ஆண்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அவர் பாலியல் சேவைகளை வழங்கி வந்துள்ளார். அப்போது காதலர் துமித்ரு காரில் துப்பாக்கியுடன் பாதுகாப்பாகப் பின்தொடர்ந்து காத்திருப்பது வழக்கம்.

வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் செல்லும் அதினா, அவர்களுக்கு விலையுயர்ந்த மதுபானத்தைக் கொடுப்பது வழக்கம். அந்தச் சமயத்தில், வாடிக்கையாளர்களுக்குக் கடுமையான போதை ஏற்பட்டு மயங்கிவிடுவதற்காக ‘ஜி.பி.எல்.’ எனப்படும் சக்தி வாய்ந்த இரசாயனப் பொருளை மதுவில் கலந்து விடுவார்.

அவர்கள் முழுமையாகச் சுயநினைவை இழந்ததும், காதலர் துமித்ருவை உள்ளே வரவழைத்து வீட்டின் அலமாரிகளிலிருந்த பணம், தங்கம், ரோலக்ஸ் கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் லாவகமாகக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிவிடுவார்கள்.

இதுவரை இந்தத் தம்பதியிடம் சிக்கிய 4 பேரில், கடுமையான இரசாயனத்தின் வீரியம் தாங்காமல் ஆக்ஸ்போர்டுஷைரைச் சேர்ந்த கேரி மவுவாத் (37) மற்றும் கிளவுசெஸ்டர்ஷைரைச் சேர்ந்த மால்கல்ம் கிங் (80) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்த ஒயின் கிளாஸ்களில் பதிவாகியிருந்த கைரேகைகளைக் கொண்டு தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், கொடூரத் தம்பதியான அதினா மற்றும் துமித்ருவைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.