ஹரியானா மாநிலம் லாட்வாவில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் வங்கி ஊழியரான இளைஞர் ஒருவருக்கு, இரண்டு உதவி ஆய்வாளர்கள்மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு சாலையில் தனது தனிப்பட்ட வேலைக்காகச் சென்ற அந்த இளைஞரை, சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் அநாகரீகமாகப் பேசி, கொடூரமாகத் தாக்கியதோடு இந்த அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். பயத்தின் காரணமாக இந்தச் சம்பவத்தை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை.
மறுநாள் வியாழக்கிழமை அந்த இளைஞருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சந்திர மோகன், வெள்ளிக்கிழமை இரவு திடாரென லாட்வா காவல் நிலையத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்.
மேலும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர சிங், சஞ்சீவ் குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சுமித் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை நடுநிலையாக விசாரிக்கத் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
