சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா, வழக்கமான தேசப்பக்தி கொண்டாட்டங்களைத் தாண்டி தற்போது முற்றிலும் வேறொரு விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாகத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், விஐபி வரிசையில் நடிகை த்ரிஷா அமர்ந்திருந்ததுதான் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்.
முதல்வரான விஜய்யைக் காண நடிகை த்ரிஷா முன்கூட்டியே வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்ததுடன், விழா முடிந்து விஜய் அங்கிருந்து புறப்படும் போது த்ரிஷாவுக்குச் சல்யூட் வைத்துவிட்டு புன்னகையுடன் கையை அசைத்துச் சென்றார். இந்தத் தருணங்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி தேசிய அளவிலும் பேசுபொருளானது.
ஏற்கனவே விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் த்ரிஷா தனது தோழியான அர்ச்சனா கல்பாத்தியுடன் கலந்துகொண்டதும், நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவின் போது விஜய் சென்றபோது த்ரிஷா உடனிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய்யின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் இரவில் த்ரிஷா கேக் வெட்டும் புகைப்படங்களை வெளியிட்டதுடன், மறுபுறம் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தரப்பிலிருந்து தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் விவாகரத்து மனு தாக்கல் போன்ற சர்ச்சைகளும் வலம் வந்தன. சமீபத்தில் சங்கீதாவின் விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டதாகச் செய்திகள் வந்த நிலையில், சுதந்திர தின விழாவில் விஜய் தன் குடும்பத்துடன் கலந்துகொள்வார் என்று தவெகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், குடும்பத்திற்குப் பதிலாக அரசு விழாவின் முதல் வரிசையில் த்ரிஷா இடம்பிடித்ததும், விஜய் அவருக்குச் சிறப்புச் சல்யூட் அடித்துவிட்டுச் சென்றதும் சமூக வலைதளங்களில் அனலைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் குரல் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான். நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். கஸ்தூரியின் இந்த அதிரடிப் பதிவு தற்போது தவெகவினர் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தித் தீயாய் பரவி வருகிறது.
