டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. மனைவியின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து கயிற்றால் நெரித்தும், அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சியும் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது  முன்னாலால் (55) என்பவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு நசியா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பணப்பிரச்சினை இருந்ததோடு, முன்னா தனது மனைவியை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்யும் சமன் (25) என்பவருடன் நசியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது.

முன்னா வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவனின் தொல்லை தாங்காமலும், பணத்தாசை காட்டியும் தனது கணவரைத் தீர்த்துக்கட்டுமாறு சமனிடம் நசியா பேரம் பேசியுள்ளார். இக்கொலைக்காக மொத்தம் 5 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய நசியா, முன்பணமாக 20 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார்.

திட்டத்தை நிறைவேற்ற நசியாவுக்குச் சமன் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பியுள்ளார். அதன்படி கடந்த 10-ஆம் தேதி இரவு, நீண்ட நேரம் உல்லாசமாக  இருக்கலாம் என்று கூறி ஒரு மாத்திரையைத் தண்ணீரில் கலந்து கணவர் முன்னாவிடம் நசியா கொடுத்துள்ளார். அதைக் குடித்தவுடன் முன்னா மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சமன் தனது கூட்டாளி கிஷன் என்பவருடன் இரவில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மயக்க நிலையில் இருந்த முன்னாவை கயிற்றால் நெரித்ததோடு மட்டுமின்றி, கொடூரமாக அவரது அந்தரங்க உறுப்பிலும் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்கக் கொன்றுள்ளனர். பின்னர் சடலத்தைச் சாலையில் வீசிவிட்டு,  திருடர்கள் புகுந்து கணவரைக் கொன்றுவிட்டதாக நாடகமாடி நீலக்கண்ணீர் வடித்தார் நசியா.

அதிகாலை 5 மணியளவில் முன்னா ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முன்னாவின் உடலில் பல காயங்கள் இருந்ததும், அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதற்கான அதிர்ச்சித் தடயங்கள் இருப்பதும் அம்பலமானது.

இதனையடுத்து நசியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். வீட்டில் ரத்தக் கறைகள் துடைக்கப்பட்டிருந்ததும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதும் போலீசாருக்குச் சந்தேகத்தை வலுப்படுத்தியது. தீவிர விசாரணையில், காதலன் சமன் மற்றும் கிஷன் உதவியுடன் கணவரைக் கொன்றதை நசியா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் நசியா, சமன் மற்றும் கிஷன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.