உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடந்துள்ள ஒரு துணிகரச் சங்கிலிப் பறிப்புச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழியில் வழி கேட்பது போல நடித்து, 75 வயது மூதாட்டியைக் கீழே தள்ளிவிட்டு 20 கிராம் தங்கம் மற்றும் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வசந்த் விஹார் பகுதியில் வசித்து வரும் ராஜ்ராணி மித்தல் (75) என்ற மூதாட்டி, கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை நேரத்தில் தனது நடைபயிற்சிக்கான ஊன்றுகோலின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள அமைதியான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பதிவு எண் இல்லாத ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டியைத் தாண்டிச் சென்றார். சற்று தூரம் சென்றதும் திடீரென வண்டியைத் திருப்பிய அந்த நபர், மூதாட்டியின் அருகில் வந்து வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பேசத் தொடங்கினார்.

அவர் எதைப்பற்றியோ கேட்பதாக நினைத்து மூதாட்டி பதிலளித்துக் கொண்டிருந்த சமயம், எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் கிடந்த சுமார் 20 கிராம் தாலிக் கொடியை அந்த நபர் திடீரெனப் பறித்துள்ளார். அதைக் காப்பாற்ற முயன்று மூதாட்டி எதிர்ப்புக் காட்டியபோது, அந்த நபர் வண்டியை வேகமாக இயக்கித் தப்பியோட முயன்றார். இதனால் நிலைதடுமாறிய மூதாட்டி ராஜ்ராணி மித்தல் சாலையில் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்.

இந்தச் சம்பவம் முழுவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பயங்கரமான காட்சியில், கீழே விழுந்த மூதாட்டி பலமுறை எழுந்து நிற்க முயன்றும் முடியாமல் சாலையில் சிரமப்பட்டுத் தவித்தது பதிவாகியுள்ளது. உதவிக்கு யாருமில்லாமல் அவர் நீண்ட நேரம் சாலையில் கிடந்த விதம் பார்ப்போரைப் பதைபதைக்க வைத்துள்ளது.

உயர் குடியிருப்புப் பகுதியான வசந்த் விஹாரில் வெறும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படை போலீஸார் தீவிரமாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி தப்பிச் சென்ற வழிகளிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், நம்பர் பிளேட் இல்லாத அந்த ஆக்டிவா ஸ்கூட்டரைக் கொண்டு மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.