மத்தியப் பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டம் சிரோஞ் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மனிதநேயத்திற்கும் விலங்குகள் மீதான அன்பிற்கும் எல்லையே இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார். மனிதர்களின் மறைவுக்கு மட்டுமே நடத்தப்படும் இறுதிசடங்குகள் மற்றும் 13-ஆம் நாள் சடங்கு நிகழ்வுகளை, தான் 20 ஆண்டுகளாக உசுிராய் வளர்த்த ஆட்டிற்காகச் செய்து அனைவரையும் நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.
அதாவது விவசாயி நவல் சிங் மால்வியா என்பவரது வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு ஆடு வளர்க்கப்பட்டு வந்தது. கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் அன்பாக ‘சமேலி’ என்று அழைத்த அந்த ஆடு, நவல் சிங்கிற்கு வெறும் கால்நடை அல்ல; மாறாக வீட்டின் ஒரு உறுப்பினராகவும் தனது சொந்தக் குழந்தையைப் போலவும் பாசத்துடன் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
வழக்கமான மற்ற ஆடுகளை தொழுவத்தில் கட்டப்படாமல், வீட்டின் உள்ளேயே படுக்கையில் தூங்கும் அந்த ஆடு நவல் சிங்கின் குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி அந்த ஆடு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது. தனது குடும்பத்தின் மிக முக்கியமான உறவு பிரிந்துவிட்டதாகக் கருதிய நவல் சிங் குடும்பத்தினர் கதறி அழுதனர்; அன்றைய தினம் அவர்களது வீட்டில் அடுப்புகூட எரியவில்லை.
தனது செல்லப் பிராணிக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளில் எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்று நவல் சிங் முடிவு செய்தார். உள்ளூர் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று, முழுமையான இந்து முறைப்படி ‘கட்டோரி’யின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு அதன் சாம்பலைச் சேகரித்துச் புனித கங்கை நதிக்குச் சென்று சாஸ்திரப்படி விசர்ஜனக் கிரிகைகளையும் அவர் நிறைவேற்றினார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களை13-ஆம் நாள் விருந்துக்கு அழைக்கக் பிரத்யேகமாகச் சோகச் செய்தி அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் கொடுக்கப்பட்டன.
13 நாள் துக்கத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாக நடத்தப்பட்டது. தன் ஆட்டின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக நவல் சிங் ஒரு பிரம்மாண்டமான விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தத் தேஹர்வி விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 600 பேர் கலந்துகொண்டனர். ஒரு பேச்சற்ற ஜீவன் மீது விவசாயி காட்டிய இந்த அளவற்ற பாசத்தையும் அர்ப்பணிப்பையும் நேரில் கண்ட அனைவரும் கண்கலங்கி நின்றதுடன், நவல் சிங்கின் செயலை மனதாரப் பாராட்டிச் சென்றனர்.
இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களுக்கே மனிதர்கள் மீது இரக்கமும் கரிசனமும் குறைந்து வரும் சூழலில், நவல் சிங் மால்வியாவின் இந்தச் செயல் சமூகத்திற்கு ஒரு சிறந்த பாடமாகவும் மனிதநேயத்தின் முகமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையான அன்பு இருக்கும்போது, மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான பந்தம் ஆன்மாவின் உறவாக மாறுகிறது என்பதை இந்தச் சம்பவம் மெய்பித்துக் காட்டியுள்ளது.
