2026-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு, களத்தில் பெரும் சங்கடமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது. பெனால்டி கார்னர் வீசப்படும்போது அணிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை மாற்று உடையறையில்  வைத்துவிட்டு வந்ததால், போட்டியின் நடுவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்தத் தொடக்க ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக, இந்தச் சூழ்நிலையில் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்குப் பாதுகாப்பு கியர்கள் அவசியமானதாகும். ஆனால், அந்த நேரத்தில் களத்தில் அந்த உபகரணங்கள் இல்லாததைக் கண்டு வீரர்கள் அதிர்ந்தனர். இதனால் நிலைமையைக் சமாளிக்கப் பாகிஸ்தான் வீரர் ஒருவர் அவசரமாக மைதானத்திலிருந்து மாற்று உடையறைக்கு ஓடிச்சென்று கியர்களை எடுத்துவரும் அவல நிலை ஏற்பட்டது.

 

இந்தத் திடீர் தாமதத்தால் மைதானத்தில் குழப்பம் விளைந்த நிலையில், அதன் நேரடித் தாக்கமாகப் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அபு பக்கர் மஹ்மூத் நடுவரால் எச்சரிக்கப்பட்டு கிரீன் கார்டு வழங்கப்பட்டார். மேலும், அவர் இரண்டு நிமிடங்கள் விளையாடாமல் வெளியேறும் படியும் உத்தரவிடப்பட்டார். உலகக்கோப்பையின் மாபெரும் மேடையில் ஒரு தேசிய அணி இதுபோன்ற அடிப்படை ஒழுக்கமின்றிச் செயல்பட்டது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் அக்பர் அணியின் இந்த மோசமான தயாரிப்பு மற்றும் ஒழுங்கீனத்தை வெளிப்படையாகச் சாடி சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது போன்ற சர்வதேச பெருமைமிக்க தொடரில் அவசியமான பாதுகாப்புப் பொருட்களை மறந்துவிடுவது அணியின் தொழில்முறைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, ஒரு “தேவையற்ற சாதனை” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த மைதானத்திற்கு வெளியேயான குழப்பம் மற்றும் அவமானம் ஒருபுறமிருக்க, ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தத் தொடக்க ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் பரிதாபத் தோல்வியைச் தழுவியது. இந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு வரும் கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, தனது அடுத்தடுத்த ஆட்டங்களில் முறையே வேல்ஸ் அணியை ஆகஸ்ட் 17-ன்றும்,  இந்திய அணியை ஆகஸ்ட் 19-ன்றும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.