இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணிக்காக எத்தகைய முடிவையும் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள கோலியும் ரோகித்தும், இந்திய கிரிக்கிட் அணியின் ஒட்டுமொத்த எதிர்காலமும் கௌதம் கம்பீரின் முழுமையான கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக் கூடாது என்று பிசிசிஐ-யிடம் தங்கள் கவலையைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பணி மற்றும் அவரது தேர்வு முறை மீதான அதிருப்தி, அணிக்குள் மூத்த வீரர்களுடன் உள்ள உரசல் மற்றும் அவரது அதிகார வரம்பு குறித்த கவலைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கோலி மற்றும் ரோகித்தின் கிரிக்கெட் உயரத்திற்கு ஈடான ஆளுமை  யாரிடமும் இல்லாததும், அணியின் ஆலோசனைகளில் சமநிலையின்மை நிலவுவதும் இந்தச் சிக்கலுக்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனைச் சரிசெய்யும் வகையில், கௌதம் கம்பீரையோ அல்லது தலைமைத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரையோ உடனடியாக நீக்கும் முடிவில் பிசிசிஐ இல்லை. மாறாக, அணிக்குள் ஒரு பலமான கட்டமைப்புச் சூழலை உருவாக்கி அதிகாரத்தைச் சமன் செய்ய வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் வி.வி.எஸ். லட்சுமணனுக்கு கூடுதல் மற்றும் முக்கியப் பொறுப்பு வழங்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

இணைப் பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒட்டுமொத்த இயக்குநர் போன்ற மிக உயர்ந்த பதவியில் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என்றும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, இதேபோன்றதொரு முக்கியப் பொறுப்பு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு வழங்கப்பட்டதாகவும், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராகவும், எந்தவித விளம்பர வெளிச்சத்திற்கும் ஆசைப்படாமல் இந்திய அணிக்குத் தேவையான நேரங்களில் அமைதியாகப் பங்களிப்பு வழங்கி வருபவர் வி.வி.எஸ். லட்சுமணன். இதனால் பிசிசிஐ வட்டாரத்திலும், மூத்த வீரர்கள் மத்தியிலும் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது.

லட்சுமணன் இந்தப் பொறுப்பை ஏற்ப பட்சத்தில், அவர்தான் பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு மற்றும் மூத்த வீரர்களுக்கு இடையேயான ஒரு பாலமாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் தற்போதைய பதற்றமான சூழலைக் குறைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரச் சமநிலையை நிலைநிறுத்த வி.வி.எஸ். லட்சுமணனின் வருகை மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என நம்பப்படுகிறது.