உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குத் தேனிலவு சென்றிருந்தபோது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், கணவர் தன்னைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா என்பவருடன் கடந்த 2023-இல் திருமணமான நிலையில், வரதட்சணை கொடுமைகள் காரணமாக அவர் ஏற்கனவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேனிலவின் போது அப்பெண்ணுக்கு மாதவிடாயும் கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர், “தனது மனநிலையைக் கெடுத்துவிட்டதாக”க் கூறி மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்.

டெல்லி திரும்பிய பிறகும் மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோரால் அவர் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே, வரதட்சணையாக ரூ. 20 லட்சம் ரொக்கம், கார் மற்றும் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பெற்ற பிறகும் குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்தியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையை அணுகியும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளரின் தலையீட்டிற்குப் பிறகே ஆகஸ்ட் 15 அன்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.