வீட்டுக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் வரும்போதும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது இயல்பானது. ஆனால் அப்போது குழந்தையின் செயல்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் முன்பு பேசும்போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் குணம், பழக்கம் அல்லது திறமை குறித்து அனைவரின் முன்னிலையிலும் பேசுவது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

“என் குழந்தை ரொம்ப கூச்சப்படுவான்”, “யாரிடமும் பேசவே மாட்டான்” என்று மற்றவர்கள் முன்பு குழந்தையைப் பற்றி தொடர்ந்து கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற பேச்சுகள் குழந்தைக்கு தன்னைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், விருந்தினர்கள் முன்னிலையில் குழந்தையை திட்டுவது, கேலி செய்வது அல்லது அவர்களின் தவறுகளை அனைவரிடமும் சொல்லி சங்கடப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. குழந்தை ஏதாவது தவறு செய்திருந்தால், மற்றவர்கள் இல்லாத நேரத்தில் அமைதியாக எடுத்துக்கூறுவது நல்லது. அதேபோல், குழந்தை விரும்பாத விஷயங்களை வற்புறுத்தி செய்ய வைப்பதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் வளரும்போது பெற்றோரின் வார்த்தைகளும் அணுகுமுறையும் அவர்களின் தன்னம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே மற்றவர்கள் முன்பு குழந்தையை மதிப்புடன் நடத்துவதும், அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவசியம். குழந்தையின் தன்மையை ஏற்றுக்கொண்டு, தேவையான இடங்களில் தனியாக வழிகாட்டுவது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவும்.