சென்னை பல்லாவரம் அருகே மகன் தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தண்டவாளப் பகுதியை நேரில் பார்வையிட்ட அடுத்த நாளே, அவரது தாய் மனவேதனை தாளாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவரை ஏற்கனவே இழந்த நிலையில், பூ வியாபாரம் செய்து வந்த காயத்ரி என்ற பெண்மணி, தனது மகன் பாலாஜியின் திடீர் மறைவால் கடும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பாலாஜி, அண்மையில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் நிலைகுலைந்த தாய் காயத்ரி, தன் மகன் உயிரை மாய்த்துக் கொண்ட தண்டவாளப் பகுதியை நேரில் சென்று பார்த்துள்ளார்.
அந்த இழப்பைத் தாங்க முடியாமல், அங்கிருந்து திரும்பிய அடுத்த நாளே அவரும் தூக்கிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மாநில அரசின் ‘104’ என்ற உதவி எண்களைத் தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
