உலகிலேயே மிக வறண்ட மற்றும் வெப்பமான நாடுகளில் ஒன்றான குவைத்தில், நதி, ஏரி போன்ற எந்தவொரு இயற்கை நீர் ஆதாரமும் இல்லாமலும், ஒரு சொட்டு மழைக்கண்ணீர் கூடப் பொழியாத நிலையிலும், அங்குள்ள 50 லட்சம் மக்களின் தாகத்தை அந்நாட்டு அரசு கடல் நீரைக் கொண்டு தீர்த்து வரும் ஆச்சரியமான தகவல் வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனித ரத்தத்தை விட 4 மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் நீரை மனிதர்கள் நேரடியாகக் குடித்தால் மரணம் கூட சம்பவிக்கலாம் என்ற நிலையில், குவைத் நாடு ‘சீ-வாட்டர் டிசலினேஷன்’ (Sea-water desalination) எனப்படும் கடல் நீரை நல்ல நீராக மாற்றும் அதிநவீன உத்தியை 1960-களிலேயே கையில் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளது.
இதற்காக அரேபிய வளைகுடாவில் இருந்து கடல் நீரை எடுத்து வந்து, ‘மல்டி-ஸ்டேஜ் ஃபிளாஷ் டிஸ்டிலேஷன்’ (MSF) மற்றும் ‘ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்’ (RO) போன்ற நவீன தொழில்நுட்பங்களின் மூலம் உப்பு மற்றும் இதர அசுத்தங்களை முழுமையாக நீக்கி, தூய்மையான குடிநீராக மாற்றி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்கின்றனர்.
குவைத்தின் ஒட்டுமொத்த குடிநீர் தேவையில் 90% இந்த தொழில்நுட்பத்தின் மூலமே பெறப்படுகிறது; குறிப்பாக அங்குள்ள ‘அஸ்-ஜூர் நார்த் காம்ப்ளக்ஸ்’ போன்ற பிரம்மாண்ட சுத்திகரிப்பு ஆலைகளின் மூலம் நாளொன்றுக்கு 24 லட்சம் கியூபிக் மீட்டருக்கும் அதிகமான நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
வெயில் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் நீரின் தேவை 15% முதல் 25% வரை அதிகரிக்கும் போது கூட இந்த தொழில்நுட்பம் தான் மக்களின் உயிரைக் காக்கிறது. குவைத் மட்டுமின்றி சவுதி அரேபியா, ஓமன் மற்றும் யுஏஇ (UAE) போன்ற பிற வளைகுடா நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றித் தங்களின் கோடி கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
