டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் போதிலும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்னமும் பேனா மற்றும் பேப்பர்களுக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தரவுகளின்படி, ஒரே நிதியாண்டில் மட்டும் இந்திய வங்கிகள் பேனா, பேப்பர் மற்றும் அச்சுப் பணிகளுக்காக (Printing and Stationery) ரூ. 3,877 கோடியை வாரியிறைத்துள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தான் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்திற்கு மத்தியில், வங்கிக் கிளைகளில் அன்றாடப் பயன்பாட்டிற்கு இவ்வளவு பெரிய தொகை காகிதங்களுக்காகச் செலவிடப்படுவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்த வங்கிகள், தங்களின் ஒட்டுமொத்த நிகர லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இதற்காகவே ஒதுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் படிவங்கள், ரசீதுகள், பாஸ்புக் அச்சிடுதல் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான எழுதுபொருட்களின் தேவை இன்னமும் குறையவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி வங்கிகள் வேகமாக நகர்ந்தாலும், இன்னும் கணிசமான வாடிக்கையாளர்கள் நேரடி வங்கிச் சேவைகளையும், காகித வழிப் பரிவர்த்தனைகளையும் நம்பியிருப்பதால் இந்தச் செலவினங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
