தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜூனியர் கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது ஆசிரியையை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் இயற்பியல் பாடம் கற்பித்த ஆசிரியை, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவனைச் சரியாகப் படிக்குமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆசிரியை மீது ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், அவரைப் பழிவாங்கும் நோக்கில் கடந்த நவம்பர் மாதம் முதல் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளைத் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆசிரியையின் முகத்தை வைத்து ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்துள்ளான்.

ஆசிரியையின் அனுமதியின்றி அவரது கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் நடந்த இந்தத் தொடர் செயல்களால், பாதிக்கப்பட்ட ஆசிரியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தொல்லை தாங்க முடியாமல் இது குறித்து அந்த ஆசிரியை அதிலாபாத் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அந்த மாணவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவனே ஆசிரியையைப் பழிவாங்க நவீன தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய இந்த விபரீதச் செயல், கல்வித் துறையிலும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.