நமது கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் எதிர்பாராத விதமாகப் பாம்புகள் புகுவது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாகப் பாம்புகள் மனிதர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வருவது கிடையாது. மழைக்காலங்களில் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு, வெப்பம், ஈரப்பதம் மற்றும் இரைகளான எலிகள், தவளைகளைத் தேடியே வாகனங்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் தஞ்சமடைகின்றன.
வாகனங்களை இயக்கி முடித்தவுடன் இன்ஜின் பகுதி கதகதப்பாகவும் இருட்டாகவும் இருக்கும். இதனால் பாம்புகள் அதில் எளிதாக மறைந்து கொள்கின்றன. மேலும், சாக்கடைகள் அல்லது புதர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது, அங்குள்ள எலிகளை வேட்டையாட பாம்புகள் இன்ஜினின் சிறிய இடைவெளிகள் வழியாக உள்ளே நுழைகின்றன. கழிப்பறைகளைப் பொறுத்தவரை, திறந்த வடிகால் குழாய்கள் மற்றும் செப்டிக் டேங்க் வழியே எளிதாக உள்ளே வந்துவிடுகின்றன.
பாம்புகள் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்கள் என்பதால் உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தச் சூழலுக்கு ஏற்ப வெப்பமான இன்ஜின் பகுதியையோ அல்லது குளிர்ச்சியான கழிப்பறைத் தரையையோ தேர்ந்தெடுக்கின்றன என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க வெளிச்சமான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதும், சில நாட்கள் பயன்படுத்தாத வாகனங்களை இயக்கும் முன் டார்ச் லைட் அடித்துப் பரிசோதிப்பதும் அவசியமாகும்.
அதேபோல் வீட்டின் சுற்றுப்புறத்தை எலிகள் மற்றும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளியலறை வடிகால் குழாய்களுக்கு முறையான மூடி போடுவதன் மூலம் பாம்புகள் உள்ளே நுழைவதைத் தடுக்கலாம். ஒருவேளை கார், ஸ்கூட்டர் அல்லது கழிப்பறையில் பாம்பைக் கண்டால், அதைக் சுயமாகப் பிடிக்கவோ கொல்லவோ முயற்சி செய்யக் கூடாது.
பாம்பு இருக்கும் இடத்தைப் பாதுகாப்பாகப் பூட்டிவிட்டு, உடனே பயிற்சி பெற்ற பாம்பு மீட்பாளர்கள் அல்லது வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பான வழியாகும். இத்தகைய எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்த்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.
