மும்பையில் நடைபாதையில் ஃபர்சான் (Farsan – காரவகை தின்பண்டங்கள்) விற்று வந்த 82 வயது முதியவர் மன்சுக் காகாவின் உருக்கமான கதை, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி குவிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மன்சுக் காகா தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஒரு புடவைக் கடையில் விற்பனையாளராகக் கழித்தவர், ஆனால் கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரது வேலை பறிபோனது. அவரைப் பராமரிப்பதற்காக அவரது மகனும் வேலையை விட நேரிட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற இந்த 82 வயதிலும் போரிவலி பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் தினமும் 12 மணி நேரம் நின்று, தனது சகோதரி வீட்டில் சுத்தமாகத் தயாரித்துக் கொடுக்கும் ஃபர்சான் தின்பண்டங்களை விற்று வந்துள்ளார்.
இவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு வெறும் 200 முதல் 300 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்து வந்தது. இவருடைய இந்த நிலையை நேரில் பார்த்த மும்பையைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பக்கவாசி (Content creator) ஆராதனா சாட்டர்ஜி, தாத்தாவின் உழைப்பையும் கஷ்டத்தையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு, மக்களுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவியதால், அடுத்த சில நாட்களிலேயே மக்கள் கூட்டம் தாத்தாவின் கடைக்குக் படையெடுத்துச் சென்று, அவர் கொண்டு வந்த தின்பண்டங்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி விற்றுத் தீர்த்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், இணையவாசிகள் மூலம் ஆராதனா சாட்டர்ஜி திரட்டிய 4 லட்சம் ரூபாய் நன்கொடைக்கான காசோலையைத் (Cheque) தாத்தாவிடம் வழங்கியபோது, அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இந்தத் தொகையைத் தனது தொழிலை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த முதலீடு செய்யப் போவதாகக் கண்ணீர்மல்கக் கூறியுள்ளார்.
“டிஜிட்டல் கம்யூனிட்டியின் உண்மையான பவர் இதுதான்”, “உலகில் இன்னும் மனிதநேயம் உயிரோடு இருக்கிறது” என நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து மன்சுக் தாத்தாவிற்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
