மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குரை பகுதியில், திருமண மேடையில் மணமாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, கேட்ட வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டுவிட்டு மணமகன் வீட்டார் கம்பி நீட்டிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெற்றோர் இல்லாததால் தனது மாமா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிஷா பன்சல் என்ற பெண்ணுக்கும், சுரேந்திர பன்சல் என்ற நபருக்கும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தன்று மேடையில் டிஜிட்டல் இசையின் முழக்கத்தோடு மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்ட நிலையில், அடுத்த கட்ட சடங்குகளுக்கு மணமகள் தயாராகியுள்ளார்.

ஆனால் திடீரென மணமகன் வீட்டார் தங்களுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், ஒரு பைக்கும் உடனடியாக வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என அடம் பிடித்துப் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். மணமகளின் மாமா தங்களால் முடிந்த சீர்வரசைகளைச் செய்துள்ளதாகக் கூறி சமாதானம் செய்ய முயன்றபோது, மணமகன் தனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்துவிட்டு மணமகள் வீட்டாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

அத்தோடு நிறுத்தாமல், நள்ளிரவில் திருமணத்தை முழுமையாக முடிக்காமல் ஒட்டுமொத்தப் பாராத்துடனும் அந்த வரதட்சணைக் பேராசைக்காரர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கைகளில் மருதாணியோடு விடிய விடியத் தனது திருமணப் பட்டுச்சேலையில் மணமகன் வருவான் என்று கண்ணீரோடு காத்திருந்த நிஷா, மறுநாள் காலை குரை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

“இனி அந்தப் பேராசைக்காரனுடன் எனக்குத் திருமணம் வேண்டாம், எனக்கு நியாயம் மட்டுமே வேண்டும்” எனத் துணிச்சலாக அந்தப் பெண் குரல் கொடுத்துள்ள நிலையில், காவல் ஆய்வாளர் யோகேந்திர சிங் டாங்கி உத்தரவின் பேரில் மணமகன், அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.