பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் லேட் லத்தீபி தனத்திற்கும், சாக்குப்போக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார்.

பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாராவது பாத்ரூம் செல்வதற்காகப் பள்ளியின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வெளியே சென்றால், அவர்களுடைய அன்றைய நாள் வருகைப்பதிவு (Attendance) ரத்து செய்யப்படுவதோடு சம்பளமும் கட் செய்யப்படும் என்று அவர் கறாராக எச்சரித்துள்ளார்.

இதற்காகப் பள்ளிகளில் ‘ஏஐ’ (Artificial Intelligence) தொழில்நுட்ப கண்காணிப்பு முறையைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும்; ஆசிரியர்கள் இயற்கை உபாதையைக் காரணம் காட்டி வெளியே சென்றால் அரை நாள் சம்பளமும், ஒரு மணி நேரத்திற்கு மேல் வராமல் இருந்தால் அன்றைய நாள் முழு சம்பளமும் பிடி செய்யப்படும் என்றும் அமைச்சர் மேடையில் பேசியுள்ளார்.

ஆசிரியப் பணி என்பது மிகவும் பொறுப்பானது, நாட்டின் எதிர்காலத் தூண்களை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது என்று கூறியுள்ள அமைச்சர், அதே வேளையில் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ஏசிபி (ACP) பலன்கள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் பதவி உயர்வு போன்ற அத்தனை பிரச்சினைகளையும் அரசே முன்வந்து தீர்த்து வைக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு பீகார் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் மிகவும் மோசமாக, அசுத்தமாக இருப்பதாகவும், முதலில் அதை அரசு சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.