அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கோமதி சீனிவாசன் இன்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் அவர் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருடன் இணைந்து திருவையாறு தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் மற்றும் அதிமுக முன்னாள் கலைப்பிரிவு செயலாளரும் பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் ஐக்கியமாகினர்.

மேலும், மற்றொரு முக்கிய திருப்பமாக சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தனது ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தவெகவுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

மாற்றுக்கட்சிகளின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தவெக நோக்கித் தொடர்ந்து படையெடுத்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.