நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனும், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருமான சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு அன்புக்கரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தனது சொத்தின் பத்திரத்தை அடகு வைத்து, சித்தார்த் உள்ளிட்டோர் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாகப் புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அரசியல் மற்றும் தொழில் அதிபர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் எம்.பி.யின் மகன் சித்தார்த் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சியின் 102-ஆவது வார்டு கவுன்சிலர் ராணி, நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் நாராயணன் ஆகிய நால்வர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நில ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியப் புள்ளிகள் பலர் இந்த வழக்கில் சிக்கியிருப்பதால், அடுத்தகட்டமாக கைது நடவடிக்கைகள் பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
