காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்குத் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சட்டப்பேரவையில் இத்தனித்தீர்மானத்தை முன்மொழிந்து ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “அரசியல் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், நதிநீரைப் பாதுகாக்கும் மக்களாட்சி கடமை நமக்கு உள்ளது; காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமலும், படுகை மாநிலங்களின் அனுமதியைப் பெறாமலும் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவதை ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டதோடு, இத்திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை; அதனை முழுமையாக ஆராய்ந்து, அவர்களின் நிலைப்பாட்டைப் பரிசீலித்த பிறகே எனது கருத்தைத் தெரிவிக்க முடியும், ஊடகங்கள் சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு தற்போதைக்கு என்னால் எதுவும் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.