மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கத்தால் ஒரு அழகான குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துள்ள விழிபிதுங்க வைக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தின் சாபர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முகுந்தி அகிர்வார் என்பவர், சமீபத்தில் தனது மனைவி பிங்கி அகிந்தவாருக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
போன் கிடைத்ததும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் போடத் தொடங்கிய பிங்கிக்கு, சமூக வலைத்தளம் மூலமாகத் தன்னை விட 5 வயது இளையவனான சத்யதேவ் சர்மகார் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில், மனைவி பிங்கி தனது கணவனையும், 9 வயது மகள் மற்றும் 4 வயது மகனையும் தவிக்கவிட்டுவிட்டு, அந்தக் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
மேலும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, இருவரும் சேர்ந்து 100 ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் ஒரு விசித்திரமான ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ ஒப்பந்தத்தையும் (Agreement) செய்துகொண்டுள்ளனர்.
அந்த அக்ரிமெண்ட்டில், தாங்கள் இருவரும் முழுச் சம்மதத்துடன் ஒன்றாக வாழ்வதாகவும், எதிர்காலத்தில் யாரும் யார் மீதும் திருமண உரிமை கோரக் கூடாது என்றும் அதிர்ச்சிகரமான நிபந்தனைகளை எழுதியுள்ளனர்.
இதனால் நிலைகுலைந்து போன கணவன் முகுந்தி, தனது இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்தியபடி சத்தர்பூர் எஸ்பி (SP) அலுவலகத்திற்குச் சென்று, “அவள் செய்த எல்லாத் தப்புகளையும் நான் மன்னித்து ஏற்றுக்கொள்கிறேன், என் பிள்ளைகளுக்காக அவளைக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
இந்த விசித்திரமான லிவ்-இன் அக்ரிமெண்ட் மற்றும் குடும்பம் சிதறிய விவகாரம் குறித்துப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
