வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் மற்றும் பணிபுரியும் இந்திய மாணவர்களும் இளைஞர்களும், தங்களது வாழ்க்கைச் செலவுகளுக்காகப் பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது இயல்பான ஒன்று. ஆனால், அவ்வாறு உழைத்துச் சம்பாதிக்கும் நபர்களைச் சமூக வலைதளங்களில் சிலர் நக்கலும் நையாண்டியும் செய்து கமெண்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம், “டொராண்டோவில் பாத்திரம் கழுவுவதற்கு எவ்வளவு கூலி கிடைக்கிறது?” என்று நக்கலாகக் கேட்ட ட்ரோலர் ஒருவருக்கு, அந்தப் பெண் கொடுத்த மிக நேர்த்தியான மற்றும் நெத்தியடி பதிலடி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தான் வெளியிட்ட வீடியோவில் அந்தப் பெண் மிகவும் அமைதியாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் பேசியுள்ளார். “நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் எந்த ஒரு வேலையும் கேவலமானது இல்லை. பிறரை ஏமாற்றாமல், தன் சொந்த உழைப்பில் வாழ்க்கையை நடத்துவதுதான் உண்மையான பெருமை. வெளிநாடுகளில் எந்த வேலைக்கும் தனி மரியாதையும் தகுதியான ஊதியமும் வழங்கப்படுகிறது” என்று கூறி, உழைப்பின் உயர்வை உணர்த்தியுள்ளார்.
பிறரை மட்டம் தட்டிப் பேசி அதில் இன்பம் காண நினைத்த ட்ரோலரின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் அமைந்த அந்தப் பெண்ணின் கம்பீரமான பதில், சுயமரியாதையையும் உழைப்பின் மதிப்பையும் பறைசாற்றுவதாக அமைந்தது. இந்தப் பதிவு வெளியான குறுகிய நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
“சொந்தக் காலில் நின்று உழைக்கும் பெண்ணின் இந்த தைரியமும் தெளிவும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். பிற நாட்டின் கலாச்சாரத்தில் உழைப்புக்குத் தரப்படும் மரியாதையையும், எந்த வேலையையும் தாழ்வாகப் பார்க்கக் கூடாது என்ற உயரிய சிந்தனையையும் பிரதிபலித்த இந்த வைரல் வீடியோ, இணையவாசிகளின் மனதை வென்றுள்ளதுடன், ட்ரோலர்களுக்கு ஒரு சாட்டையடிப் பாடமாகவும் அமைந்துள்ளது.
See this Instagram video by @really_ratchel https://t.co/8iRxrUp9Nb
“>
