உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மிகக் காரசாரமான கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்தியாவில் தற்போது 1,000 இளைஞர்களில் வெறும் 12 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை கிடைப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

​நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதித்து வரும் அதே வேளையில், தொழிலதிபர் அதானியின் வருவாய் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 30 மடங்கு வரை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

​தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் உள்ள பாஜக அரசும் RSS அமைப்பும் நாட்டின் வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக அழித்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார். இளைஞர்களுக்கு உரிய வேலைகளை உருவாக்கத் தவறியதோடு, நாட்டின் பொருளாதார அமைப்பையே சீர்குலைத்து விட்டதாகவும் சாடினார்.

​மேலும், நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை RSS மற்றும் பாஜகவினர் திட்டமிட்டுத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கைப்பற்றி வருவதாகவும் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவரது இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.