தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணைவு அங்கீகாரம் வழங்கும் ஆய்வுக் குழு மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த சில கல்வியாண்டுகளுக்கான விவரங்களைக் கேட்டிருந்தது.

ஆனால் பல்கலைக்கழகம் உரிய தகவல்களை வழங்காததால், இது குறித்து தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஆணையம், கோரப்பட்ட தகவல்களை வரும் ஆகஸ்ட் 20, 2026-க்குள் வழங்குவதுடன், ஆய்வுக்குழு மற்றும் பேராசிரியர்களின் முழு விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 20-ன் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் மற்றும் தீவிர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

“>

 

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக இணைவு ஆய்வுகளில் போலி பேராசிரியர்கள் முறைகேடு புகார்கள் எழுந்து லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் உள்ள நிலையில், மருத்துவக் கல்வித் துறையிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.