கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதூர்சாமி(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன், விஜயலட்சுமி தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் அரசுபுரத்தில் துணி வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து அந்த தம்பதியினர் பல்வேறு தேவைகளுக்காக சதுர்சாமிடமிருந்து 22 1/2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டத்துறையில் எங்களுக்கு சொந்தமாக இருக்கும் 9 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை உங்களது பெயருக்கு கிரையம் செய்து கொடுத்து விடுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கூறியபடி அவர்கள் நிலத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து சதூர்சாமி பலமுறை கேட்டும் அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக சதூர்சாமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுதாகர், விஜயலட்சுமி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் சீனிவாசன், சதீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சுதாகர், விஜயலட்சுமி ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.