அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகப் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அவரது சொந்த நாட்டிலேயே மிகப் பெரிய அரசியல் சம்மட்டி அடி விழுந்துள்ளது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி போரைத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தியும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 215க்கு 208 என்ற வாக்குகள் கணக்கில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ட்ரம்பின் சொந்த ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்திருப்பது ஒட்டுமொத்த வெள்ளை மாளிகையையும் உலுக்கியுள்ளது.
இந்தத் தீர்மானம் சட்டமாக மாற செனட் சபையின் ஒப்புதல் தேவை என்றாலும், ‘அமெரிக்க வீரர்கள் யாரும் இறக்காத வரை ஈரான் மீது நான் முழுப்போர் (All-out War) தொடுக்க மாட்டேன்; வான்வழித் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுள்ளன’ என்று ட்ரம்ப் தனது கூட்டாளிகளிடம் ரகசியமாகப் பேசிய விபரம் தற்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மூலமாக அம்பலமாகியுள்ளது.
இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலால் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்ததே இந்த உள்நாட்டு எதிர்ப்புக்குக் காரணம் என்றும், இதனால் ட்ரம்பின் போர் அதிகாரத்திற்குப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளதாகவும் சர்வதேச அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றன.”
