“சினிமா கதைகளை மிஞ்சும் அளவிற்கு நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் நம்மை அப்படியே வாயடைத்துப் போகச் செய்துவிடும். அந்த வகையில், பிரேசிலில் அரங்கேறியுள்ள ஒரு மோசடிச் சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது.
அங்கே ஒரு நற்பண்பு மிக்க குடும்பத்தினர், ஆதரவற்ற மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள 12 வயது சிறுமி என்று நம்பி ‘கேப்ரியல்’ என்ற பெண்ணை தத்தெடுத்து, சுமார் 14 மாதங்களாகத் தங்கள் சொந்தப் பிள்ளை போல நெஞ்சுருகப் பாசம்காட்டி வளர்த்துள்ளனர்.
அவளுக்கு 12வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியதுடன், அவள் பள்ளிக்குச் சென்றால் வன்முறையாளரான தந்தை கண்டுபிடித்துவிடுவார் என்று பயந்து அழுததால் அவளைப் பள்ளிக்கும் அனுப்பவில்லை. பாட்டில் பால் குடிப்பது, பசிஃபையர் (அமைதியாக இருப்பதற்கும் அல்லது தூங்குவதற்கும் வாயில் வைத்துக் கொள்ளும் ரப்பரால் ஆன ஒரு போலிச் சப்பல் (Nipple)) பயன்படுத்துவது,
View this post on Instagram
“>
இரவில் பீதித் தாக்குதல் (Panic Attack) வந்தது போல நடிப்பது எனப் பக்கா குழந்தையாகவே அவள் வலம்வந்துள்ளார். ஆனால், ஒரு உறவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோதுதான் அந்த ட்விஸ்ட் அம்பலமானது.
அந்த 12 வயது ‘சிறுமி’ உண்மையில் பல மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து கைதேர்ந்த 37 வயது முதிர்ந்த பெண் என்பதும், அவளது நிஜப் பெயர் அமண்டா மரியா சூசா ஒலிவேரா என்பதும் தெரியவந்து அந்தக் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையில், இந்தப் பெண் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டில் மரியா எடுவார்டா என்ற பெயரில் இதேபோல 12 வயது சிறுமியாக நடித்து, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரெனாட்டா மாகல்ஹேஸ் என்பவரை ஏமாற்றி நிதியுதவியும், வீடும் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அன்று மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகத் தனது உடலில் 100 ஊசிகளைத் தானே குத்திக் கொடூரம் செய்துகொண்ட இந்த மோசடிப் பேர்வழி, தன் முதிர்ந்த தோற்றத்தை மறைக்க ‘சிறுவயதில் தந்தை ஹார்மோன் ஊசிகளைப் பலவந்தமாகப் போட்டார்’ என்று அடுக்கடுக்கான பொய்களைக் அவிழ்த்துவிட்டுள்ளார்.
இவளது மொபைலைச் சோதித்தபோது, ஆட்டிசம் மற்றும் மனச்சோர்வு உள்ளவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று கூகுளில் தேடிப் படித்து, பக்கா ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பியோட முயன்றபோது பிடிபட்ட இந்த 37 வயது பெண், தற்போது மோசடி மற்றும் போலி அடையாளக் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
‘ஆட்டிசம் என்பது ஒரு தீவிரமான பாதிப்பு, அதை வைத்து விளையாடிய இவள் ஒரு அரக்கன்’ எனப் பாதிக்கப்பட்டவர்கள் சோஷியல் மீடியாவில் கண்ணீருடன் பதிவிட்டு வரும் இந்த பகீர் விவகாரம், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை அதிர வைத்து வருகிறது.”
