தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கும் செயல் மட்டுமல்ல, அது தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு மகத்தான இயற்கை நிகழ்வாகும். பொதுவாகத் தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமே நல்லது என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது.
ஆனால், உண்மையில் குழந்தைக்குப் பாலூட்டுவது தாயின் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என்பதை நவீன மருத்துவ உலகம் அழுத்தமாக நிரூபித்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும், பல கடுமையான நோய்களில் இருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கும் தாய்ப்பால் அளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன், பிரசவத்திற்குப் பிறகு விரிவடைந்த கருப்பையைச் சுருக்கி, மீண்டும் பழைய அளவுக்குக் கொண்டுவரப் பெருமளவில் உதவுகிறது. மேலும், பிரசவத்திற்குப் பிந்தைய அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமன்றி, பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைச் சார்ந்த புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரசவத்திற்குப் பின் அதிகரிக்கும் எடையைக் இயற்கையான முறையில் குறைப்பதற்கும், டைப்-2 நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கும் தாய்ப்பால் அளிப்பதே சிறந்த வழியாகும்.
சமூகத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்துப் பல தவறான கருத்துக்களும் மூடநம்பிக்கைகளும் நிலவி வருகின்றன. பாலூட்டினால் தாயின் அழகு கெட்டுவிடும் என்றோ, உடல் பலவீனமடைந்துவிடும் என்றோ பரப்பப்படும் செய்திகளில் எவ்வித அறிவியல் உண்மையும் இல்லை. மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கும் குழந்தைகக்கும் இடையே ஒரு நெகிழ்ச்சியான உணர்வுப் பிணைப்பு உருவாகிறது.
இது தாய்க்கு ஏற்படும் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியையும் மனநிறைவையும் தருகிறது. எனவே, எந்தவிதப் போலி வதந்திகளையும் நம்பாமல், தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும் குழந்தையின் நலனுக்காகவும் தாய்ப்பால் அளிப்பதைப் பெருமையோடும் விழிப்புணர்வோடும் தொடர வேண்டும்.
