சொப்பன சாஸ்திரத்தின் கூற்றுப்படி, இரவில் நாம் காணும் கனவுகள் வெறும் கற்பனை அல்ல; அவை நமது எதிர்காலத்தில் நடக்கப்போகும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளாகவே பார்க்கப்படுகின்றன. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. அந்த வகையில், கனவில் நாம் அணியும் ஆடைகள் மற்றும் அவற்றின் நிலை நம் வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
ஒருவர் தனது கனவில் அழுக்கான அல்லது கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது போலக் கண்டால், அது ஜோதிட ரீதியாக ஒரு அசுபமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இத்தகைய கனவு எதிர்காலத்தில் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பு மற்றும் மரியாதையில் குறைவு ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது. மேலும், தொழிலில் எதிர்பாராத தடங்கல்கள் வரக்கூடும் என்றும், கையில் எடுக்கும் திட்டங்கள் தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும் இது எச்சரிக்கிறது.
அதேவேளையில், இந்தக் கனவு நிதி நிலைமை தொடர்பான முக்கியமான எச்சரிக்கையையும் தருகிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் பண நெருக்கடி, தேவையற்ற வீண் செலவுகள் அல்லது பொருளாதார ரீதியான சவால்களை இத்தகைய கனவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, கிழிந்த அல்லது அழுக்கு ஆடைகளைக் கனவில் காண்பவர்கள் பண விஷயத்திலும், புதிய திட்டங்களைத் தொடங்குவதிலும் சற்று கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது என்று ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், அதே கனவில் நீங்கள் அழுக்குத் துணிகளைத் துவைப்பது போலக் கண்டால், அது ஒரு சிறந்த சுப சிக்னலாகும்! உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்துவந்த பழமையான பிரச்சனைகள், தடைகள் மற்றும் கவலைகள் அனைத்தும் விரைவில் விலகப் போகின்றன என்பதை இது குறிக்கிறது. பழைய நஷ்டங்களில் இருந்து மீண்டு, வாழ்வில் புதிய வாய்ப்புகளும், முன்னேற்றமும் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதையே துணி துவைப்பது போன்ற கனவு உணர்த்துகிறது.
