மேற்கு ஆசியாவில் உள்ள குவைத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிராந்தியம் முழுவதும் தொடர்ச்சியாக நீடித்து வரும் கடுமையான ராணுவ மோதல்களால் அங்கு மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமான முறையில் முன்னேறி வருவதாகவும், இன்னும் சில நாட்களுக்குள், அதாவது இந்த வார இறுதிக்குள்ளேயே ஒரு சாத்தியமான ஒப்பந்தம் எட்டப்படக்கூடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நிலவி வரும் அடுக்கடுக்கான பகைமையையும், வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் இருந்து ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை தனியாக பிரித்து வைக்க விரும்புவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதோடு, லெபனானில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக, வாஷிங்டன் சமீபத்தில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் டிரம்ப் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மேற்கு ஆசியாவில் மோதல்கள் இன்னும் பெரிய அளவில் வெடிக்கக்கூடும் என்ற உலக நாடுகளின் அச்சத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபரின் இந்த இராஜதந்திரக் கருத்துக்கள் சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளன.
