“டெல்லி மருத்துவமனை தீ விபத்து சோகம் மறைவதற்குள், பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் நடந்தேறியுள்ள இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரம்மபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் 13 படுக்கைகள் மட்டுமே கொண்ட அந்த வார்டில், விதிமுறைகளை அப்பட்டமாக மீறி 15 நோயாளிகளை அனுமதித்து கொடூர அலட்சியம் காட்டியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். தீப்பிடித்த உடனே கரும்புகை சூழ்ந்ததால், அங்கே பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு அமைப்புகள் அனைத்தும் வெறும் காட்சிப் பொருளாகவே நின்று ஏமாற்றியுள்ளன.

“>

இதில் கொடுமையின் உச்சமாக, மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் துடிதுடித்து 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த மீட்புக்குழுவினர் சுமார் 25 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இந்த விபத்தில் ஐசியூ பொறுப்பாளரும் பலத்த தீக்காயமடைந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளின் இந்த அலட்சியப்போக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் (டி.எம்.) சுப்ரதா குமார் சென் தலைமையில் தீவிர நிர்வாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கோர விபத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் நெஞ்சை பிழிய வைக்கின்றன.

‘தீப்பிடித்த உடனே எங்களோட அப்பாவையும், மத்த நோயாளிகளையும் அப்படியே தவிக்கவிட்டுட்டு அங்கிருந்த டாக்டர்களும் நர்சுகளும் தப்பி ஓடிட்டாங்க’ என்று உறவினர்கள் கண்ணீருடன் கதறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், விபத்து நடந்த நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவின் மெயின் கேட் பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே இருந்தவர்களால் அலறியும் வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி மடிந்துள்ளனர்.

விபத்துக்குப் பிறகு ஆத்திரமடைந்த மக்கள் திரண்ட போது, இறந்தவர்களின் சடலங்களைக்கூட ஒப்படைக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் உடல்களை மறைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பும் ‘எங்கள் சடலங்கள் எங்கே?’ என்ற நியாயமான கேள்வி ஒட்டுமொத்த முசாஃபர்பூர் நகரையே உலுக்கி எடுத்து வருகிறது.”