தமிழக அரசியலில் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அவர் மீதான வழக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒருவேளை யாராவது தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சொத்து சேர்த்திருந்தால், அந்தச் சொத்துக்களை அரசு தாராளமாகப் பறிமுதல் செய்து கொள்ளலாம்; அதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மக்களுக்காக உழைப்பதையே கடமையாகக் கொண்டுள்ளோம். எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
சட்டத்தின் முன் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மிரட்டல்களுக்கோ, சோதனைகளுக்கோ நாங்கள் அஞ்சமாட்டோம்” எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் மீதான சில பழைய வழக்குகளை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த ஓப்பன் ஸ்டேட்மென்ட் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
