சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், வடமாநிலப் பெண்களையும் தமிழகப் பெண்களையும் ஒப்பிட்டுப் பேசினார்.

அவர் பேசுகையில், “வடமாநிலங்களில் இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும், குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அடுப்பங்கரையிலேயே இருக்க வேண்டும் என்றுமே சொல்லிக் கொடுக்கிறார்கள்” எனப் பொரிந்து தள்ளினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் இது தமிழ்நாடு, திராவிட நாடு! இங்குப் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரால் ‘பெண்கள் படிக்க வேண்டும்’ என்ற புரட்சி விதைக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பெண்கள் வெறும் கரண்டியை மட்டும் பிடிக்காமல், இன்று அரசு கொடுத்த லேப்டாப்பை கையில் ஏந்தி கம்பீரமாக இன்டர்வியூக்களுக்குச் செல்கிறார்கள்.

இதனால்தான் உலக நிறுவனங்கள் சென்னைக்குத் தேடி வருகின்றன” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடமாநிலப் பெண்களின் நிலை குறித்து அவர் பேசிய இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போது இணையத்தில் ‘ஹாட்’ டாபிக்காக மாறியுள்ளது.