தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக ஒரு கொள்கை பிடிப்போடு இயங்கும் கட்சி. எங்கள் மீது யாரும் அழுத்தம் (Pressure) கொடுக்க முடியாது; அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்கும் வழியில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யூகங்கள் குறித்துப் பேசிய அவர், “திமுகவைப் பொறுத்தவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வலுவாக இருக்கிறது.
கூட்டணி கட்சிகளிடையே சுமூகமான உறவு நீடிக்கிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே திமுக அரசுக்கு நெருக்கடி இருப்பதாக வதந்திகளைப் பரப்புகின்றனர்.
ஆனால், எந்தவொரு சக்தியாலும் திமுகவை அசைக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது” என மாஸாகப் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் அமைச்சரின் இந்த ‘போல்ட்’ ஆன பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
