லண்டனைச் சேர்ந்த 23 வயது பிரபல டிக்டாக் கிரியேட்டரான ப்ரூக் ஜார்ஜ், துபாயில் தனது காதலனைத் திட்டமிட்டு கொடூரமாகக் குத்திக் கொன்ற புகாரில் துபாய் போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச விபாரம் உலக நாடுகளை உலுக்கியெடுத்துள்ளது. ஜூன் 22 ஆம் தேதி அதிகாலை துபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த விபரீதக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆன்லைனில் பழகி காதலித்து வந்த தனது காதலனுடன் துபாய்க்கு சுற்றுலா வந்திருந்த ப்ரூக் ஜார்ஜ், அங்கு ஏற்பட்ட கடுமையான மோதலில் சமையலறை கத்தியை எடுத்து காதலனை சரமாரியாகக் குத்திக் கொன்றதாகத் துபாய் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். துபாய் நாட்டு சட்டப்படி திட்டமிட்டுக் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

​இருப்பினும், தான் தற்காப்புக்காகவே (Self-defense) கத்தியை எடுத்ததாக ப்ரூக் ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. காதலன் தன்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாஸ்போர்ட்டைப் பிடுங்கிக் கொண்டு, தொடர்ந்து கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகவும், உயிருக்கு பயந்து தப்பிக்க முயன்ற போதே இந்த விபரீதம் நடந்ததாகவும் லண்டனைச் சேர்ந்த ‘டெடைன்ட் இன் துபாய்’ என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புர் துபாய் போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீஸார் யாரும் இல்லாமல், ஆண் போலீஸார் முன்னிலையில் தன்னை முழுமையாக நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதாக ப்ரூக் ஜார்ஜ் தெரிவித்துள்ள பகீர் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் கொலை வழக்கின் பின்னணி குறித்து துபாய் போலீஸார் தற்போது சர்வதேச எல்லையைத் தாண்டி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.