மஹாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், புனேயில் நடந்த பிரபல ‘கேதன் அகர்வால்’ கொலை வழக்கைக் காட்டிலும் மிகவும் கொடூரமான ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது குறித்து இங்குள்ள விஷ்ராம்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போள்மளா பகுதியில் வசித்து வந்த ஆனந்த் ஹனுமந்த் சர்ஜே என்ற வாலிபர், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆனந்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவர் போதையில் அடிக்கடி தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமையைத் தாங்க முடியாமலும், தனது 23 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வழிதேடியும், அந்தப் பெண் தனது கணவனைக் கொலை செய்ய ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார்.
அதன்படி, நள்ளிரவில் கணவனுடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தின் கால்களை ஒரு துப்பட்டாவால் கட்டிப் போட்டுள்ளனர். தொடர்ந்து அவரது மார்பின் மீது ஏறி அமர்ந்து, நெஞ்சை நசுக்கியும் கழுத்தை நெரித்தும் மிகக் கொடூரமாக ஆனந்தைக் கொலை செய்துள்ளனர்.
அதன்பின், அவர் தூக்கத்திலேயே மாரடைப்பால் இறந்துவிட்டது போல் நாடகமாடி, தனது சகோதரனின் உதவியுடன் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஆனந்தின் கழுத்தில் இருந்த நகக்கீறல்களைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதோடு உடற்கூராய்வு அறிக்கையில் அது கொலை என்று உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்தப் பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
