பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் இந்தியாவின் மிக முக்கிய குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இந்தியாவின் முதன்மை எதிரியான லஷ்கர்-இ-தொய்பா தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய மூன்று முக்கிய தீவிரவாதிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹாபிஸ் சயீதின் மிக நெருங்கிய கூட்டாளியும், காஷ்மீர் தீவிரவாதத்தின் பின்னணியில் இருந்தவனுமான காஜி மும்தாஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளான். அதேபோல், லஷ்கர் அமைப்பின் சீனியர் தலைவரான முகமது யாகூபின் சகோதரன் முகமது குஜைமா காசிம் பகவல்பூரில் நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டதாகவும், காலித் பஷீர் என்ற மற்றொரு முக்கிய ஆபரேட்டிவ் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தொடர் மரணங்கள் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே மிகப்பெரிய நடுக்கத்தையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், தீவிரவாதிகளின் இறுதி சடங்குகளில் லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் ரகசியமாக கலந்து கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாகவே, லஷ்கர் அமைப்பின் டாப் கமாண்டர்கள் பலர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்படுவதும் அல்லது தங்களுக்குள் ஏற்படும் உள்நாட்டு மோதல்களால் மர்மமான முறையில் இறப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பல கொடூரமான தாக்குதல்களை நடத்திவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த தீவிரவாதிகள், இப்போது ஒத்த ஒத்தையாக கணக்கு தீர்க்கப்பட்டு வருவது இந்தியாவின் எதிரிகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
