மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் துணை சுகாதார நிலையத்தில், மனிதநேயமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது  22 வயதான நிகிதா பைர்வா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கே அவர்களுக்குக் காத்திருந்தது பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் தான்.

 

நடுங்கும் குளிரில், பிரசவ வலியால் அந்தப் பெண் துடித்தபடி இருக்க, மருத்துவமனையின் கதவை அவரது குடும்பத்தினர் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக தட்டியுள்ளனர். உள்ளே ஊழியர்கள் இருந்தும் யாரும் கதவைத் திறக்காததால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் இறுதியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். இந்த நெஞ்சைப் பிழியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

உள்ளே நுழைந்த பிறகும் கூட, ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக எந்தவொரு சிகிச்சையையும் வழங்கவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். வேறு வழியின்றி, அந்தப் பெண்ணை ஒரு மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, வேறு  அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நல்ல வேளையாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இந்தச் சம்பவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் 24 மணி நேர அவசரச் சேவைப் பிரிவின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அலட்சியப் போக்கு குறித்து கிராம மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.