கண்களிலும் வாயிலும் ஏற்படும் தொடர்ச்சியான வறட்சி என்பது வெறும் தண்ணீர் பற்றாக்குறை அல்லது சாதாரண கண் சோர்வு மட்டும் அல்ல. இது ‘ஷோக்ரன்’ எனப்படும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த ஒரு நீண்டகாலப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களை விட பெண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பதால், பெண்கள் இந்த அறிகுறிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்களில் கண்ணீரை உருவாக்கும் சுரப்பிகளும், வாயில் உமிழ்நீரை உருவாக்கும் சுரப்பிகளும் கணிசமாகப் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாகக் கண்களில் எரிச்சல், அரிப்பு, மணல் விழுந்தது போன்ற உணர்வு மற்றும் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படலாம். அதேபோல் வாயில் வறட்சி, உணவை மென்று விழுங்குவதில் சிரமம், தொண்டை வறட்சி ஆகியவற்றுடன் பல் சொத்தை மற்றும் வாய் தொற்றுகளும் அதிகரிக்கக்கூடும்.

கண்கள் மற்றும் வாயுடன் நிற்காமல், இந்த நோய் உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கக்கூடும். காரணம் புரியாத சோர்வு, மூட்டு வலி, தசை வலி, தோலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நீடித்த இருமல் போன்றவை இதன் பிற அறிகுறிகளாகும். அரிதான சூழல்களில் நரம்புகள், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மரபியல் காரணிகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தவறான செயல்பாடுகள் ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. ரத்தப் பரிசோதனைகள், கண்ணீர் மற்றும் உமிழ்நீர் உற்பத்தி குறித்த சோதனைகள் மூலம் மருத்துவர்கள் இந்நோயைக் கண்டறிகின்றனர். இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், செயற்கைக் கண்ணீர் மருந்துகள் மற்றும் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும் சிகிச்சைகள் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, தொடர்ச்சியாகக் கண் மற்றும் வாய் வறட்சி இருந்தால் அதை வயது அல்லது சாதாரணக் களைப்பு என்று அலட்சியப்படுத்தக் கூடாது. தொடர் சோர்வு அல்லது மூட்டு வலியுடன் வறட்சியும் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது எதிர்காலப் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.