கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை 2026 ஆகஸ்ட் 11 அன்று முறைப்படி திருமணம் செய்துகொண்டார். போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடந்த இந்தத் திருமண விழாவில், தங்களது 5 குழந்தைகள் மட்டுமே பங்கேற்றனர். வெளிநபர்கள் யாருமன்றி மிகவும் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்களது காதல் கதை மாட்ரிட் நகரிலுள்ள ஒரு ‘குச்சி’ கடையில் தொடங்கியது. அங்கு விற்பனை உதவியாளராகப் பணியாற்றிய ஜார்ஜினாவை, ரொனால்டோ முதன்முதலில் சந்தித்தார். அன்றைய தினம் ஜார்ஜினா பணிக்கு வர வேண்டிய அவசியம் இல்லாதபோதும், தன் தோழியின் ஷிஃப்ட்டைப் பார்க்க வந்த இடத்தில் தான் இந்த அரிய சந்திப்பு நிகழ்ந்தது. 2016-ம் ஆண்டுவாக்கில் மலர்ந்த இவர்களது காதல் பயணம், பின்னர் உலகறியத் தொடங்கியது.

நீண்ட காலமாகவே இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஒரு மூத்த மகனும் உள்ளார். இவர்களது குடும்ப நிகழ்வுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தனர்.

கடந்த 2025 ஆகஸ்ட் 11 அன்று தங்களது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இனிப்பான அதிர்ச்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து, சரியாக ஓராண்டுக்குப் பிறகு தங்களது நிச்சயதார்த்த நாளன்றே இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

சிறுவயதில் திருமணத்தைப் பற்றிப் பெரிய கனவுகள் இருந்ததாகவும், ஆனால் பிரபலமடைந்த பிறகு தனிப்பட்ட அமைதியான வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகவும் ஜார்ஜினா தெரிவித்துள்ளார். பல வருடக் காதல் தம்பதிகளாக வலம் வந்த ரொனால்டோ – ஜார்ஜினா ஜோடி, தற்போது கணவன் – மனைவியாக மாறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.