வாஷிங் மெஷினில் துவைத்த பிறகும் வெள்ளைச் சட்டையின் காலர் மற்றும் அக்குள் பகுதியில் இருக்கும் பிடிவாதமான மஞ்சள் கறைகளை வீட்டில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டு சுலபமாக அகற்றி விடலாம். வியர்வை, உடல் எண்ணெய் மற்றும் டியோடரன்ட் சேர்வதால் தான் இதுபோன்ற கறைகள் ஏற்படுகின்றன. இவற்றை அகற்றுவதற்கு முன் சட்டையின் ‘Care Label’ வழிகாட்டுதலைச் சரிபார்ப்பது முக்கியம்.
கறையை அகற்றப் பேக்கிங் சோடாவைத் தண்ணீருடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டாக மாற்றி, கறை உள்ள இடத்தில் தடவி டூத் பிரஷ் மூலம் மெதுவாகத் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துத் துவைக்கலாம். அதேபோல், சம அளவு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரைக் கலந்து கறையின் மீது தெளித்து 30 நிமிடங்கள் ஊறவைத்தும் துவைக்கலாம். முழுச் சட்டையிலும் கறை இருந்தால், வெதுவெதுப்பான வினிகர் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்துத் துவைப்பது நல்ல பலனைத் தரும்.
நீண்ட நாட்களாக இருக்கும் பிடிவாதமான கறைகளுக்குப் பேக்கிங் சோடாவுடன் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்துப் பேஸ்ட் செய்து தடவலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு வெள்ளை ஆடைகளுக்குச் சிறந்த வெண்மையைத் தரும். மேலும், டியோடரன்ட்டினால் ஏற்படும் பிசுபிசுப்புக் கறைகளுக்குச் சிறிதளவு பாத்திரம் கழுவும் லிக்விடை கறை உள்ள இடத்தில் தடவி மெதுவாகத் தேய்த்துக் கழுவலாம்.
துவைத்த பிறகு கறை முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதி செய்த பின்னரே ஆடையை உலர்த்த வேண்டும். கறை இருக்கும்போதே டிரையரில் (Dryer) உலர்த்தினால், வெப்பத்தின் காரணமாகக் கறை துணியில் நிரந்தரமாகப் பதிந்துவிடும். மேலும், வெவ்வேறு சுத்திகரிப்புப் பொருட்களை ஒன்றாகக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்; முக்கியமாக வினிகரையும் ப்ளீச்சையும் எப்போதும் ஒன்றாகக் கலக்கக் கூடாது.
எந்தவொரு முறையைப் பின்பற்றுவதற்கு முன்பும், துணியின் மறைவான ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. கறைகள் புதிதாக இருக்கும்போதே உடனடியாகச் சுத்தம் செய்வது, ஆடைகளின் பளிச் வெண்மையைக் காலப்போக்கில் மங்காமல் காப்பாற்ற உதவும்.
