வங்கதேசத்தில் நரசிங்கடி மாவட்டத்தில் நாய் ஒன்றின் கழுத்தில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, முகமது அலி (25) என்ற இளைஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நாகரியா கண்டி பாலத்தின் மீது ஆடையின்றி நின்றிருந்த அந்த இளைஞர், நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, அதன் மறுமுனையில் ஒரு முழு செங்கல்லைப் பிணைத்து ஆற்றில் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன. அந்தப் பாசமில்லா கொடூரத்தின்போது, பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும், நாய் ஆற்றில் தத்தளித்தபடியே அடித்துச் செல்லப்பட்டதும் பார்ப்போர் நெஞ்சைப் பதறவைத்துள்ளது.

விலங்கு நல ஆர்வலர்களின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோபம் எல்லையைக் கடந்தது. ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், குற்றம் சாட்டப்பட்ட முகமது அலியை உடனடியாகச் சிறைப்பிடித்து, இந்தச் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்ததோடு, விலங்கு வதைக்கு எதிராகக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த நபோலீஸார், அவரைத் தங்களது காவலில் எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தின்போது உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்த மற்ற மூன்று பேரையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.