கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ட்ரினிட்டி மெட்ரோ ரயில் நிலையம் (Trinity Metro Station) அருகே, தூண்களில் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழை தொழிலாளி ஒருவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 3:52 மணி அளவில், அந்தப் பரபரப்பான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் விளக்குகள் அமைப்பதற்காக ‘எர்த் பிட்’ தோண்டும் பணி (Earth pit excavation) நடைபெற்றுள்ளது.
அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி, எதிர்பாராமல் அங்கிருந்த ஒரு மின்சார ஒயரின் மீது கையை வைக்க, அடுத்த நொடியே அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். வாகனங்கள் வேகமாகச் செல்லும் அந்தச் சாலையில் தொழிலாளி மின்சாரம் தாக்கி கீழே விழும் அந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (BMRCL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தூண் எண் 153 அருகே ‘எம்/எஸ் எம் ஆர் எலக்ட்ரிக்கல்ஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்த விளக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. மின்சாரம் தாக்கிய உடனே சக ஊழியர்கள் அந்தத் தொழிலாளியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த விபத்து எதனால் நடந்தது, யாருடைய அலட்சியம் காரணம் என்பது குறித்து மெட்ரோ நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Week full of bad news from Bengaluru Metro. After two disruptions, now a labourer carrying out lighting related work for BMRCL was electrocuted & died. He was engaged in earth pit excavation work near the trinity metro station. pic.twitter.com/rATGnp2P1Y
— Deepak Bopanna (@dpkBopanna) June 27, 2026
ஏற்கனவே இந்த வாரத்தில் மட்டும் பெங்களூரு பர்பிள் லைன் மெட்ரோவில், கப்பன் பார்க் நிலையம் அருகே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இரயில்கள் நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளான நிலையில், தற்போது ஒரு தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கும் சம்பவம் மெட்ரோ திட்டங்களின் பாதுகாப்பு தரத்தைக் கேள்விக்குறியாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
